என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Tuesday, September 05, 2006

பாடுகிறேன்...!


அலையொதுக்கும் நுரையொதுங்கும் ஆற்றங்கரையோரம்
அழகான நிலவுதிக்கும் அந்தி மாலை நேரம்
ஆசைமனம் வாடுதடி ஆரும் சொல்லலியா? என்
ஆவல் எல்லாம் தூது விட்டேன், அன்பைச் சொல்லலியா?

கருக்கலிலே இருள்கவிழ்ந்து கருகும்முனு ஆச்சு,
வருத்துகின்ற புயலெல்லாம் உன் வாச மூச்சு!
செருக்கழிந்த வாழையெல்லாம் செதில்செதிலாய்ப் போச்சு,
செத்திருந்த புஞ்சை நிலம் செவச்செவனு ஆச்சு!

ஓடொழுகும், வீடொழுகும், ஓசையோடு சேர்ந்தொழுகும்,
பாடுகின்ற பறவையெல்லாம் பதுங்கப் பதுங்க இசையொழுகும்!
ஓடிவந்த வெள்ளமெல்லாம் ஓடையோடு சேர்ந்திருக்க,
ஒதுங்கி நிற்பதேனடி, நீ ஒளிந்து கொள்வதேனடி..!

திண்ணையெல்லாம் ஈரமாச்சு, திசையெல்லாம் சாரலாச்சு,
தீயாக உன் நினைப்பு குளிர்காய வரலாச்சு!
முற்றமெல்லாம் நீர் தேங்க, முன்பார்த்த நினைவாக,
முத்தமிடும் என் மனசு, முழுதாகப் பழுதாக...!

மின்னலிங்கு சிரிப்பாக, மிச்சமெல்லாம் நெருப்பாக,
பின்னலிட்ட கோலமயில், பிரிந்து நிற்பதேனடி?
விளக்கொண்ணு ஏத்தி வெச்சேன், விடியலின் துளியாக,
விளங்கலையே உன்மனசு, விளக்கமேதுமுண்டோ?

புளியமரப் பேயாக புரண்டாடும் மனசடங்க,
பூக்களெல்லாம் வேண்டாம், உன் புன்னகையே போதும்.
கலிமனுஷச் சதியாக, கதை முடியும் நேரத்தில்
கவிதையெல்லாம் வேண்டாம், உன் கண்ணிமையே போதும்!

சில நேரம் சிலையாக, சில நேரம் உலையாக,
சிந்துகின்ற பார்வையில் உடல் சிக்கிப் போகும்!
மழை நனைத்த பாதங்கள், மண்ணில் போடும் கோலங்கள்
மணம் கொஞ்சம் வீசும், என் மனதோடு பேசும்!

மேகமெல்லாம் மழையாச்சு, மண்ணோடு சேர்ந்தாச்சு,
மேற்குத்திசை ஒளியெல்லாம் மெல்ல மெல்ல மறைஞ்சாச்சு,
கதவடைக்கும் பொழுதாச்சு, கருங்குயிலும் களைச்சாச்சு,
மனசடைக்க முடியலையே, மருகிமருகிப் பாடுகிறேன்...!!

எழுதியது : 08.Sep.2003

2 Comments:

Blogger ஷைலஜா said...

அழகிய கவிதை வசந்த்! எப்போதோ படித்திருக்கவேண்டியதை இப்போதுதான் படிக்கும் வாய்ப்புகிட்டியது மீதம் படித்து கருத்து சொல்வேன் விரைவில்!
ஷைலஜா

10:48 PM

 
Blogger Kavinaya said...

//புளியமரப் பேயாக புரண்டாடும் மனசடங்க,
பூக்களெல்லாம் வேண்டாம், உன் புன்னகையே போதும்.
கலிமனுஷச் சதியாக, கதை முடியும் நேரத்தில்
கவிதையெல்லாம் வேண்டாம், உன் கண்ணிமையே போதும்!//

நான் ரசித்த வரிகள் :)

கவிதை ச்சோ ச்வீட்! :)

8:23 AM

 

Post a Comment

<< Home