என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

நீ..?


கொத்திக் கொத்திச்
செதுக்கிய
என் இதயத்துக்குள்
குடியேறும்,
சின்னக்குருவியா நீ..?

காதலுக்குள்.


விழித்திருக்கையில்
தூக்கிக் கொண்டு
அலைகிறேன்,
உறங்கையிலோ
சுருண்டு
படுத்துக் கொள்கிறேன்,
உன் காதலுக்குள்.

எனதா, உனதா ?


'நமது'
என்பேன்
என எதிர்பார்த்து,
'இந்த இதயம் எனதா, உனதா'
என
நீ கேட்ட கேள்விக்கு,
'உனது' என்றேன்,
எனது என்று
எதுவும்
இல்லை
என்றான பின்பு.

மஞ்சள் பாதை.


மஞ்சள் பூக்கள் நிரம்பி வழிகின்ற பாதையின் நடுவே நாம் நடக்கிறோம். மாலை நேரப் பொன்னொளி இலைகளின் இடுக்குகளில் நுழைந்து நிறைக்கிறது.

எங்கிருந்தோ வருகின்ற , மெல்லிய தென்றல் நம்மையும் தடவிச் செல்கின்றது. லேசான குளிர் அடிக்கின்ற நேரத்தில் கோர்த்துக் கொண்ட விரல்களோடு நடக்கிறோம்.

உன் ஆடையின் நுனிகளிலிருந்து சொட்டுகின்ற மென்னொளியைக் குடித்துக் கொண்டே நடக்கிறது, என் நிழல்.

நம்மிடையே பூத்திருக்கும் மெளனப் பானையை கொத்திக் கொத்தி உடைக்கின்றன, சிட்டுக்குருவிகளின் கீச்சுக் கீச்சுக் குரல்கள்.

சாத்தானா?

உன்
இதழைச் சுவைக்கும்
ஆப்பிளை அனுப்பியது,
மறுபடியும்
அதே சாத்தானா..?

எங்கே நடந்தன..?

உன் விரல்
தீண்டும்
மயக்க நொடிகளில்,
மண்ணில் பதியாத
இந்தக் கால்கள்
எங்கே
நடந்தன..?

உன் சிரிப்பில்
நனைகின்ற
பார்வைகள்,
கண்களில்
எங்கே
கரைகின்றன?

நிழல்...!


நடக்கையில்
உன் நிழலாக வேண்டும்
என்ற
என் வேண்டுதலை
தவிர்க்கச் செய்கிறது,
இருளில்
காணாமல் போகின்ற
உன் நிழல்...!!

இதுவரை!

இதுவரை சொன்ன
வார்த்தைகளில் மட்டுமல்ல,
இன்னும்
சொல்லப் போகும்
வார்த்தைகள் மேலும்
காத்திருக்கிறது
காதல்...!

உளவு!

நம் காதலை
எட்டிப்
பார்ப்பதற்கே
கீற்றுகளைக்
கிழித்து வருகிறது,
நிலவொளி...!!

சறுக்கி...!


சின்னப் பூக்கள்
தீண்டும்
உன் கூந்தலில்
சறுக்கி
விளையாடுகிறது
என் மனம்...!

மாலை!


நான்
தொடுகையில்
நீ கொண்ட
வெட்கத்தை
அள்ளிப்
பூசிக் கொண்டது
பொன்மாலை..!